செய்திகள்

அமெரிக்காவில் தாயின் சடலத்தை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது

Published On 2019-02-16 07:21 GMT   |   Update On 2019-02-16 07:21 GMT
அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். #USWomanarrested
வாஷிங்டன்:

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவர் ஜோ விட்னி அவுட்லண்ட்(55). இவரது தாய் ரோஸ்மேரி(78). ஜோ விட்னியின் வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. சம்பவத்தன்று விட்னியின் உறவினர் ஒருவர், அவரது வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது,  விட்னியின் தாயின் சடலம், போர்வைகளால் சுருட்டி வைக்கப்பட்டு கிடந்ததை அறிந்தார்.

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு விட்னியின் தாயாரின் உடல் 54 போர்வைகள் கொண்டு சுருட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை  நடத்தினர்.

அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கடிதம் ஒன்றை போலீசார் கண்டறிந்தனர். இதில் ரோஸ்மேரி கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று உயிரிழந்ததாக எழுதப்பட்டிருந்தது. இடைப்பட்ட நாட்களில்  உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என யாரையும் விட்னி வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை. சடலத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை மறைக்க, 66 விதமான ரூம் ஃப்ரஷ்னர்களை பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டிற்கு சென்றபோது, அவரது வீட்டில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

அவரது தாயின் மரணத்திற்கு பிறகு ஜோ விட்னி உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளார். இதையடுத்து கடந்த செவ்வாயன்று அவர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் விட்னி தரப்பில் வாதாட வக்கில் யாரும் இல்லை.

இதன் பின்னர் போலீசாரின் விசாரணையில் இருந்த அவரை விடுவித்து, மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்  என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தாயின் இறப்பினை வெளியில் சொன்னால் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் யாரிடமும் கூறவில்லை என விசாரணையின்போது விட்னி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #USWomanarrested



 



 
Tags:    

Similar News