செய்திகள்

ஹாங்காங்கில் உருளைக்கிழங்குகளுடன் வந்த முதலாம் உலகப்போர் வெடிகுண்டு

Published On 2019-02-04 19:25 GMT   |   Update On 2019-02-04 19:25 GMT
ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Potatoes #HongKong #FirstWorldWar
சென்டிரல்:

ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது. அதை உற்று நோக்கியபோது அது கையெறி வெடிகுண்டு என தெரிந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில், அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

போலீஸ் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது. முன்னாள் போர்க்களத்தில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு, அவற்றை சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக கிடைத்த கையெறி வெடிகுண்டை உருளைக்கிழங்கு என நினைத்து ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்துவிட்டனர்” என தெரிவித்தனர்.  #Potatoes #HongKong #FirstWorldWar 
Tags:    

Similar News