செய்திகள்

பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

Published On 2019-01-19 05:16 GMT   |   Update On 2019-01-19 05:16 GMT
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். #PakistanSC
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் 26-வது தலைமை நீதிபதி ஆவார்.

புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, விமானப்படை தளபதி ஆசிம் ஜாகீர், கடற்படை தளபதி ஜாபர் மக்மூத் அப்பாசி, பாராளுமன்ற செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி, பாராளுமன்ற மக்கள் சபை சபாநாயகர் ஆசாத் கைசர், மூத்த மந்திரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர்.

புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவின் பதவிக்காலம் 337 நாட்கள் ஆகும். இவர் இந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி ஓய்வு பெறுவார்.

பதவி ஏற்ற பின்னர் பொறுப்பு ஏற்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  #PakistanSC
Tags:    

Similar News