செய்திகள்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் பலத்த மழை-வெள்ளம்

Published On 2018-12-24 13:46 IST   |   Update On 2018-12-24 13:46:00 IST
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #SrilankaRain #srilankaFlood
கொழும்பு:

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைத்துரைப்பற்று ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிஉள்ளன. அங்கு வாழும் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பண்டாரவன்னி பகுதியில் உள்ள ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. கேப்பாபிளவு- பிரம்படி பகுதியில் பலத்த காற்று வீசியதால் வீடுகள் சேதம் அடைந்தன.

வில்பத்து- மன்னார் வீதியில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. அதில் ஒரு பயணிகள் பஸ் சிக்கிக் கொண்டது. அதை இன்று அதிகாலை ராணுவத்தினர் மீட்டனர். அதில் இருந்த 70-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

மழை வெள்ளத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2542 குடும்பங்களை சேர்ந்த 8,369 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர்கள் 22 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்தபுரம், ரத்தினபுரம், பொன்னகர், வட்டகங்கச்சி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் திருமுறிகண்டி, செல்வபுரம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் பள்ளிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரணைமடுகுளம் நிரம்பி வழிவதால் அதில் உள்ள 14 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண பணிகளை ராணுவ அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தேவையான நிவாரண பொருட்களை வழங்க அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #SrilankaRain #srilankaFlood
Tags:    

Similar News