செய்திகள்

ரஷியாவின் சோயுஸ் விண்கலம் 3 வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது

Published On 2018-12-04 11:44 GMT   |   Update On 2018-12-04 11:44 GMT
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று வீரர்களை சுமந்துசென்ற ரஷியாவின் சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது #Soyuz #ISS #firstmannedmission
மாஸ்கோ:

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதேபோல், ஆய்வுகள் முடிந்த பின்னர் அங்கிருக்கும் வீரர்கள் பூமிக்கு திரும்பி வருவதுண்டு.

அவ்வகையில், ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்ச்சின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரரான நிக் ஹாக் ஆகியோருடன் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்ட ராக்கெட் திடீரென்று வெடித்து சிதறியது.

அதில் சென்ற இரு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது ரஷியாவின் விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

ஆனால், சற்றும் மனம்தளராத ஆராய்ச்சியாளர்கள் சோயுஸ் விண்கலத்தை வேறு சிலருடன் மீண்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், ஆட்களை அனுப்பாமல் சோயுஸ் மூலம் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்துக்கு பல டன்கள் அளவிலான உணவு, எரிபொருள் போன்றவற்றை அனுப்பி வைத்தனர். இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தது. சோயுஸ் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்தது.



இதைதொடர்ந்து, ரஷிய வீரர் ஓலேக் கோனோனென்க்கோ, அமெரிக்காவின் அன்னி மெக்லைன் மற்றும் கனடாவை சேர்ந்த விண்வெளி வீரர் டேவிட் செயின்ட் ஜேக்குவெஸ் ஆகியோருடன் சோயுஸ் விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கோனுர் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட சோயுஸ் குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.

இதில் சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் வரும் 11-ம் தேதி முதல் விண்வெளியில் இறங்கி நடந்து  விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை கண்டுபிடித்து அடைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், விண்வெளியில் தங்கி இருக்கும்போது ஏற்படும் தசை இழப்பு தொடர்பாக அங்கு புழுக்களை வைத்து செய்யும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளிலும் இந்த வீரர்கள் இன்றிலிருந்து சுமார் ஆறரை மாதம் வரை ஈடுபடுவார்கள் என தெரிகிறது. #Soyuz #ISS #firstmannedmission
Tags:    

Similar News