செய்திகள்

பிரிட்டனில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - இன்று வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு

Published On 2018-11-20 06:42 GMT   |   Update On 2018-11-20 06:42 GMT
பிரிட்டனில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #DraftBrexitAgreement #TheresaMay
லண்டன்:

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை (பிரெக்சிட்) ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வந்தது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு, பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்துள்ளார்.



இந்த வரைவு ஒப்பந்தத்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதிருப்தி அடைந்த பலர் பதவி விலகினர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

இந்நிலையில், தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு ஒப்பந்தம் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் ஆளுங்கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்றால், தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்பிக்கள் கடிதம் கொடுக்க வேண்டும். இதில் ஏற்கனவே பெரும்பாலான எம்பிக்கள் கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த தீர்மானம் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தெரிகிறது. #DraftBrexitAgreement #TheresaMay
Tags:    

Similar News