செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?

Published On 2018-11-13 21:57 GMT   |   Update On 2018-11-13 21:57 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #USPresidency2020 #KamalaHarris
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில் ஜனநாயக கட்சி சார்பில் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்ட் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளி வந்தன.



இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., என்ற பெயரைப்பெற்றுள்ள கமலா ஹாரீசுக்கு (வயது 54) அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அங்கு கலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்தாலும் கூட பூர்வீகம், சென்னைதான். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். இவர் ‘பெண் ஒபாமா’ என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்துக்கு முன்பு அவர் இயோவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது கூட்டங்களுக்கு ஒபாமாவுக்கு கூடியதுபோல கூட்டம் கூடியதாக தகவல்கள் கூறுகின்றன.

கமலா ஹாரீஸ், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கக்கூடும் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. அவற்றை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இவர் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

அமெரிக்காவில் இப்போது ஜனாதிபதி தேர்தல் நடந்து அதில் போட்டியிட்டால், டிரம்பை கமலா ஹாரீஸ் 10 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என ஆக்ஸியாஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது. #USPresidency2020 #KamalaHarris
Tags:    

Similar News