செய்திகள்

லயன் ஏர் விமான விபத்து- மீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் உயிரிழந்த சோகம்

Published On 2018-11-03 13:10 IST   |   Update On 2018-11-03 13:10:00 IST
இந்தோனேசியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். #LionAir #PlaneCrash #IndonesianDiver
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு நகருக்கு சென்ற லயன் ஏர் பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். 

ஜாவா கடல் பகுதியில் சிதறிக் கிடந்த 79 உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் கருப்புப் பெட்டி, விமானத்தின் செயல்பாடுகளை பதிவு செய்யும் தரவு பதிவி மற்றும் சில பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் மீட்பு பணியின்போது உயிரிழந்தார். 

சியாசுருல் ஆன்டோ (வயது 48) என்ற அந்த வீரர், தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் தன்னார்வலர் என்றும், காற்றழுத்தம் குறைந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கடற்படையின் தேடுதல் மற்றும் மீட்பு பிரிவு கமாண்டர் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் பாலு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு ஆன்டோ மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏர் ஏசியா விமானம் விபத்தில் சிக்கியபோதும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LionAir #PlaneCrash #IndonesianDiver
Tags:    

Similar News