செய்திகள்

3 குழந்தை பெற்றால் இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு

Published On 2018-11-01 05:28 GMT   |   Update On 2018-11-01 09:32 GMT
குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை இத்தாலி அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். #Italygovt
ரோம்:

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் அங்கு குழந்தைகள், இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக உள்ளனர்.

அந்த நாட்டில் பல ஆண்-பெண்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை. இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை. இது தான் குழந்தை பிறப்பு குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும், தம்பதியினருக்கும் குழந்தை பிறப்பதும் குறைவாகவே இருக்கிறது. ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் பலர் குழந்தை பிறப்பை நிறுத்தி விடுகிறார்கள்.

எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.



குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும். இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றை 3-வது குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்பட இருக்கிறது. இதை எப்படி அமல்படுத்தலாம் என்பது பற்றி தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #Italygovt
Tags:    

Similar News