செய்திகள்

பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் - இம்ரான் கான்

Published On 2018-09-23 16:13 GMT   |   Update On 2018-09-23 16:13 GMT
அமைதி பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்திய பலவீனமாக கருத வேண்டாம் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். #IndPakTalks #ImranKhan
இஸ்லாமாபாத்:

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த படுகொலைகள் பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
 
மேற்கண்ட இரு சம்பவங்களையடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
இந்தியாவின் நடவடிக்கை குறித்து நேற்று கருத்து தெரிவித்த இம்ரான் கான், ‘இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, முன் அனுபவம் இல்லாத பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை புதுப்பிப்பதில் அவசரம்  காட்டியதால்தான் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் சமாதான முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அமைதி பேச்சுவார்த்தைக்கான பாகிஸ்தானின் சமாதான  முயற்சியை இந்தியா பலவீனமாக கருத வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய தலைமை தனது அடாவடி போக்கை கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரும் என நம்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வறுமையை ஒழிக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார். #IndPakTalks #ImranKhan
Tags:    

Similar News