செய்திகள்

போருக்கு நாங்கள் தயார், ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அமைதியை விரும்புகிறோம் - பாக். ராணுவம்

Published On 2018-09-22 18:24 GMT   |   Update On 2018-09-22 18:24 GMT
பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறிய நிலையில் போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியுள்ளது. #BipinRawat #PakistanArmy
இஸ்லாமாபாத் :

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

இதற்கிடையே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். மேலும், நமது ராணுவ வீரர்கள் உணர்ந்த அதே வேதனையை அவர்களும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.



இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக உள்ளது என அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உயிரிழந்த வீரரின் உடலை சிதைத்த இந்திய ராணுவம் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அவர்கள், கடந்த காலங்களில் இதை போன்று பலமுறை செய்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கட்டுக்கோப்பானது, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் எவ்விதத்திலும் எங்கள் ராணுவம் ஈடுபடாது.

போருக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எனினும், பாகிஸ்தான் மக்களின் நலன், அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நலன் கருதி அமைதி வழியில் செல்லவே விரும்புகிறோம்.

எல்லையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று கடந்த மே மாதம் இந்திய ராணுவம் கோரிக்கை வைத்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இவ்வாறான செயல்களில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டால் நாங்கள் வேறு விதமான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரும் என ஆசிப் கபூர் தெரிவித்தார். #BipinRawat #PakistanArmy
Tags:    

Similar News