செய்திகள்

புற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்

Published On 2018-09-22 09:50 GMT   |   Update On 2018-09-22 09:50 GMT
எய்ட்ஸ், புற்றுநோயை விட கொடியது மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. #WorldHealthOrganization

ஜெனீவா:

உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் சர்வதேச அளவில் ஏற்படும் மரணங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சுகாதார துறை சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தி 500 பக்க அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சர்வதேச அளவில் எய்ட்ஸ், வன்முறை மற்றும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை விட மது குடிப்பதால்தான் அதிக மரணம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால் 200 விதமான நோய்களை உருவாக்குகிறது. கல்லீரல் பாதிப்பு, சிலவகை புற்று நோய்கள் ஏற்படுகின்றன. காசநோய், எய்ட்ஸ், நுரையீரல் சுழற்சி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

மது குடிப்பதால் உடல் நலம் பாதித்து நோய் வாய்ப்பட்டு வருடந்தோறும் 30 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அது 5.3 சதவீதம் ஆகும்.

அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் 1.8 சதவீதம் பேரும், சாலை விபத்துக்களால் 2.5 சதவீதம் பேரும், வன்முறை தாக்குதலில் 0.8 சதவீதம் பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

எனவே, எய்ட்ஸ், புற்று நோய், நீரிழிவு, சாலை விபத்துக்கள் மற்றும் வன்முறையால் உயிரிழப்பவர்களை விட மது குடிப்பதால் மரணம் அடைபவர்களே மிக அதிகம் என கூறப்பட்டுள்ளது.

மது குடிப்பதால் அவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. போதை தலைக்கேறுவதால் வன்முறையும், அதனால் ஏற்படும் காயத்தால் உயிரிழப்பும் உண்டாகிறது.

உடல்நலக் கோளாறுகளால் புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம், கல்லீரல் பாதிப்பு போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே குடிபிரியர்கள் மதுவை கைவிட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #WorldHealthOrganization

Tags:    

Similar News