செய்திகள்

கடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கியது புளோரன்ஸ் புயல் - மின்சாரம் இல்லாமல் 1.5 லட்சம் மக்கள் தவிப்பு

Published On 2018-09-14 06:25 GMT   |   Update On 2018-09-14 06:25 GMT
அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் தவிக்கின்றனர். #HurricaneFlorence
வாஷிங்டன்:

அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



இந்த பதற்றமான சூழ்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தாக்கத்தினால் படகு குழாம்கள் சேதமடைந்துள்ளன.

இந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி மாநில கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு ஹூஸ்டனில் ஹார்வே புயல் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று இந்த புயலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. #HurricaneFlorence
Tags:    

Similar News