செய்திகள்

அலிபாபா நிறுவனரும் உலகப் பணக்காரருமான ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல்

Published On 2018-09-09 23:04 GMT   |   Update On 2018-09-09 23:04 GMT
சீனாவில் புகழ் பெற்ற அலிபாபா ஆன்லைன் இ-வர்த்தக சேவை நிறுவனத்தின் செயல் தலைவராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Alibaba #JackMa
பெய்ஜிங் :

சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ-வர்த்தக சேவையில் புகழ் பெற்றது.  இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்து மற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்து நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனம் மற்றொரு வணிக நிறுவனத்திடம் என பலவகையான விற்பனை சேவைகளை அளித்து வருகிறது.

அலிபாபா நிறுவனம் கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த நிறுவனத்தில் தலைவராக சீனாவை சேர்ந்த ஜாக் மா இருந்து வருகிறார்.  அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் உள்ள ஜாக் அதனை தொடங்குவதற்கு முன் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிறுவனத்தினை தொடங்குவதற்காக தனது நண்பர்களிடம் பேசி 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஜாக் கேட்டு பெற்றுள்ளார். தொடக்கத்தில் சீனாவில் கிழக்கு நகரான ஹேங்ஜூவில் உள்ள அவரது குடியிருப்பு பகுதியில் அலிபாபா நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அவரிடம் 3 ஆயிரத்து 66 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் உள்ளன என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது ஓய்வு அறிவிப்பினை இது முடிவல்ல என்றும் ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ள ஜாக், கல்விசார்ந்த சேவையில் தனது நேரத்தினை செலவிட முடிவு செய்துள்ளார் என தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கடந்த வெள்ளி கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அளித்துள்ள தகவலின்படி, செயல் தலைவர் பதவியில் ஜாக் தொடர உள்ளார் என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

நாளை அவரது 54வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்றும் பொறுப்புகளை அடுத்த கட்ட தலைவர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.  #Alibaba  #JackMa
Tags:    

Similar News