செய்திகள்

ஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு - பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்

Published On 2018-09-05 23:36 GMT   |   Update On 2018-09-05 23:36 GMT
இஸ்ரேலுக்கான பராகுவே தூதரகம் ஜெருசலேமில் இருந்து மீண்டும் டெல் அவிவ் நகருக்கு மாற்றப்படும் என அந்நாடு அறிவித்ததால் பதிலடியாக அந்நாட்டுடன் தூதரக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. #Jerusalem
வாஷிங்டன்:

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.

எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, மூன்றாவதாக பராகுவே நாடும் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை அதன் முன்னாள் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மூலம் திறந்தது. ஆனால், அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மரியோ அப்டோ என்பவர் சமீபட்தில் பதவியேற்றார்.

அவர், பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் விவகாரம் அமைதியான முறையில் பேசி தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறி ஜெருசலேமில் திறக்கப்பட்ட பராகுவே நாட்டு தூதரகத்தை மூடிவிட்டு மீண்டும் டெல் அவிவ் நகரில் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.

பராகுவே புதிய அதிபரின் இந்த் திடீர் முடிவால் இஸ்ரேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், பராகுவே நாட்டில் இயங்கி வரும் தங்களது தூதரகம் மூடப்படும் என பதிலுக்கு பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த திடீர் நடவடிக்கையை சமத்துவம் அற்ற செயல் என பராகுவே அதிபர் மரியோ அப்டோ விமர்சித்துள்ளார். #Jerusalem
 
Tags:    

Similar News