செய்திகள்

ஏமனில் 40 குழந்தைகளின் உயிரை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி கூட்டுப் படைகள் வருத்தம்

Published On 2018-09-01 15:12 GMT   |   Update On 2018-09-01 15:12 GMT
ஏமன் நாட்டில் 40 குழந்தைகள் உள்பட 51 உயிர்களை பறித்த விமான தாக்குதலுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வருத்தம் தெரிவித்துள்ளன. #Saudiledcoalition #Yemenbusstrike
ரியாத்:

ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் சடா நகரின் பிரபல மார்க்கெட் பகுதியின் மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்தனர்.

குழந்தைகள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருந்தது.

இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது. 

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப் படையை சேர்ந்த உயரதிகாரிகள் தங்கள் பக்கம் தவறுகள் உள்ளதற்காக இன்று வருத்தம் தெரிவித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். #Saudiledcoalition  #Yemenbusstrike
Tags:    

Similar News