செய்திகள்

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் - எதிர்க்கட்சிகள் சார்பில் 2 பேர் போட்டி

Published On 2018-08-27 23:30 GMT   |   Update On 2018-08-27 23:30 GMT
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். #Pakistan #PresidentialPolls
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்காக பல நாட்களாக தொடர்ந்து அந்த கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் அந்த கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

எனவே பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரகுமான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு எதிர்க்கட்சிகள் சார்பில் 2 பேர் போட்டியிடுவதால், ஆளுங்கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #PresidentialPolls
Tags:    

Similar News