செய்திகள்

ஜெர்மனியில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Published On 2018-08-27 21:45 GMT   |   Update On 2018-08-27 21:45 GMT
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்ட வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. #WorldWarIIbomb
பெர்லின் :

ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் லூட்விக்ஸ்காபென் நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்டது என்று அதை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள 18,500 பேர் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி தொடங்கியது.  

மேலும், வெடிகுண்டு இருந்த இடத்தில் இருந்து 1000 மீட்டர் சுற்றுவட்டார பகுதியில் இருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நிபுணர்கள் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

நாசி ஜெர்மனிக்கு எதிராக வீசப்பட்ட இந்த குண்டு 70 ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, லூட்விக்ஸ்காபெனில்  நகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம்’ என தெரிவித்தது.

பின்னர், 2 மணிநேரம் கழித்து மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன்பு இதே போல் பிராங்பர்ட் மற்றும் பெர்லின் நகரங்களில் இங்கிலாந்து  படைகளால் வீசப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. #WorldWarIIbomb
Tags:    

Similar News