செய்திகள்

உள்கட்சி மோதல் - ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரி ஜுலி பிஷப் ராஜினாமா

Published On 2018-08-26 09:21 GMT   |   Update On 2018-08-26 09:21 GMT
ஆஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜுலி பிஷப், வெளியுறவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். #JulieBishop
கான்பெரா:

ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை மந்திரி பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், பிரதமர் பதவியில் நிலைக்க அவர் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என மால்கோல்ம் டர்ன்புல் அறிவித்தார். வெளியுறவு மந்திரி ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். இதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா மக்கள் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்த ஆறாவது பிரதமராக ஸ்காட் மாரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை ஸ்காட் மாரிசன் பிரதமராக பதவி வகிப்பார் என தெரிகிறது. தனது தலைமையிலான புதிய மந்திரிசபைக்கான பட்டியலை ஸ்காட் மாரிசன் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்காட் மாரிசனை எதிர்த்து போட்டியிட்ட ஜுலி பிஷப் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பாராளுமன்றத்தில் இனி ஆளும்கட்சி வரிசையில் அமரப்போவதில்லை. பின்வரிசையில் அமர்ந்து மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.

இதனால், பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் பெரும்பான்மையுடன் ஊசலாட்டம் போடும் ஆளும் லிபரல் கட்சி- தேசிய கூட்டணி பெரிய பின்னடைவை சந்திக்கலாம் என கருதப்படுகிறது. #JulieBishop
Tags:    

Similar News