செய்திகள்

கேரள கனமழை - மாலத்தீவு ரூ.35 லட்சம் நிதியுதவி

Published On 2018-08-20 23:00 GMT   |   Update On 2018-08-20 23:00 GMT
கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக ரூ.35 லட்சம் வழங்கப்படும் என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது. #KeralaFlood
மாலி :

கேரள மாநிலத்தில் சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் தன்னார்வலர்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ரூ.35 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மாலத்தீவு அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறுகையில், இந்தியா எங்கள் நெருங்கிய அண்டை நாடாகும். இந்தியாவில் இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அது மாலத்தீவில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். தேவையான நேரங்களில் தோழமையோடு எங்களுடன் நின்ற இந்தியாவிற்கு மாலத்தீவின் சிறிய நன்கொடை இது என அவர் தெரிவித்தார். #KeralaFlood
Tags:    

Similar News