செய்திகள்

அல்பேனியாவில் இரு குழந்தைகள் உட்பட உறவினர்கள் 8 பேர் கொலையில் தேடப்பட்டவர் கைது

Published On 2018-08-11 12:29 GMT   |   Update On 2018-08-11 12:29 GMT
அல்பேனியாவில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Albania
டிரானா:

ஐரோப்பாவின் பால்கன் தீவுகளில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. இந்த நாட்டின் தலைநகராக விளங்குவது டிரானா. இந்த நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் ரித்வான் சைகாஜ் (24).

இவர் நேற்று  2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றி இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த படுகொலை தொடர்பான தகவலை வெளியிட்ட ரித்வான் சைகாஜ், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என அலபாமா பிரதமர் எடி ராமா-வுக்கு சவால் விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.

இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கொலையாளி பதுங்கி இருந்த இடத்தை இன்று சுற்றி வளைத்த போலீசார், ரித்வான் சைகாஜ்-ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட உறவினர்கள் தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி சந்தேக கண்ணோட்டத்துடன் நடத்தி வந்ததால் ஆவேசத்தில் அவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்துக் கட்டிவிட்டதாக பிடிபட்ட ரித்வான் சைகாஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #Albania
Tags:    

Similar News