செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு - ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி

Published On 2018-07-22 00:10 IST   |   Update On 2018-07-22 00:10:00 IST
பாகிஸ்தான் தேர்தலில் வரும் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் உறுதியுடன் உள்ளார். #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தேர்தலில் வரும் புதன்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் உறுதியுடன் உள்ளார். #ImranKhan

342 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் புதன்கிழமை (25-ந் தேதி) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்த தேர்தலில் பல கட்சிகள் களத்தில் குதித்து இருந்தாலும் கூட, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பி.பி.சி. நிறுவனத்துக்கு இம்ரான்கான் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள், அங்கு ஆட்சியைப் பிடித்து விட முடியும் என்ற அவரது உறுதியை காட்டுகிறது.

இதுபற்றி அவர் கூறும்போது, “பாகிஸ்தானை மீண்டும் உயர்த்திக்காட்டுவதுதான் எங்கள் இலக்கு. அதை நோக்கியே பிரசாரம் செய்கிறோம். எங்கள் முக்கிய கொள்கை, ஊழலை ஒழிப்பதாகும்” என்று குறிப்பிட்டார்.

இம்ரான்கான் தொடர்ந்து பேசும்போது, “இதுவரை பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகள் திடீரென தேர்தல்கள் நேர்மையாக நடைபெறாது என கவலை வெளியிட்டு வருகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்கள் ஆதரவு பெருகி வருவதை காட்டுவதே இதற்கு காரணம். எனவே இப்போதே அவர்கள் கதை கட்டத் தொடங்கி விட்டனர்” என்று கூறினார்.

“நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை, மக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது, இந்த ஊழல்களால்தான் நாட்டில் பணம் இல்லாமல் போய் விட்டது. மனித வள மேம்பாட்டுக்கு பணம் இல்லாத நிலை வந்து விட்டது” என்றும் இம்ரான்கான் சாடினார்.

ஆனால் நவாஸ் ஷெரீப் தண்டிக்கப்படுவதற்கு உண்மையான காரணம், அவர் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பு கொள்கையிலும், வெளியுறவு கொள்கையிலும் ராணுவத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததுதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இப்போதும் தேர்தலில் நேரடியாக ராணுவத்தின் தலையீடு இருக்காது என்று கூறப்பட்டாலும், அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டதாக புகார் எழுந்து வருகிறது.

நவாஸ் ஷெரீப் கட்சி வேட்பாளர்கள் பலரும், தாங்கள் கட்சி தாவுமாறு ராணுவ உளவுப்பிரிவினரால் மிரட்டப்படுவதாகவும், நவாஸ் ஷெரீப்புக்கு அனுதாப அலை இருப்பது போல செய்திகளை வெளியிடக்கூடாது என ஊடகத்தினர் அறிவுறுத்தப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தேர்தலை சீர்குலைக்க சதி நடப்பதாக நவாஸ் ஷெரீப் கட்சியினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் இம்ரான்கான் கட்சியினரோ ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்குத்தான் நவாஸ் ஷெரீப் தரப்பினர் குற்றம்சாட்டுவதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போதைய நிலவரப்படி நவாஸ் ஷெரீப் கட்சிக்கு சாதகமாக உள்ளது. அவரது கட்சிக்கு 32 சதவீதத்தினரின் ஆதரவும், இம்ரான்கான் கட்சிக்கு 29 சதவீத ஆதரவும் இருப்பதாக கூறுகின்றன. இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 3 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  #ImranKhan #PakistanGeneralElection
Tags:    

Similar News