செய்திகள்

கிளாஸ்கோ நகரத்தில் பெரும் தீ விபத்து - பிரசித்தி பெற்ற கலைப்பள்ளி கட்டிடம் நாசம்

Published On 2018-06-16 23:23 GMT   |   Update On 2018-06-16 23:23 GMT
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. #Glasgow #SchoolofArt
லண்டன்:

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளி உள்ளது. இந்த கலைப்பள்ளியில் மாகிந்தோஷ் கட்டிடத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு தீப்பிடித்தது. இந்த தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியதுடன், அதையொட்டி அமைந்து உள்ள இரவு விடுதி வளாகம், இசை அரங்கத்துக்கும் பரவியது.



இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 120 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ வானளாவ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே தீயணைப்பு படையினர் போராட வேண்டியது ஆயிற்று.

இது பற்றி ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை துணை தலைவர் பீட்டர் ஹெத் கூறும்போது, “இந்த தீ விபத்தினால் கலைப்பள்ளியின் கட்டிடம் நாசமாகி விட்டது. தீயணைப்பு பணி பெரும் சவாலாக அமைந்தது” என்று குறிப்பிட்டார். ஏற்கனவே 2014-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் மாகிந்தோஷ் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. பெரும் செலவில் அந்தக் கட்டிடத்தை சீரமைக்கும் பணி நடந்தது வந்தது. அடுத்த ஆண்டு இந்த கட்டிடத்தை திறக்க இருந்த நிலையில் மறுபடியும் அந்தக் கட்டிடம் தீ விபத்துக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலைப்பள்ளி தீ விபத்தையொட்டி உடனடியாக அக்கம்பக்கத்தினர் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த தீ விபத்து, கலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Glasgow #SchoolofArt #Tamilnews
Tags:    

Similar News