செய்திகள்

25 வினாடிகள் முந்திச் சென்றதற்காக மன்னிப்பு கேட்ட ஜப்பான் ரெயில்வே துறை

Published On 2018-05-18 17:49 IST   |   Update On 2018-05-18 17:49:00 IST
ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு 25 வினாடிகள் முன்னதாகவே பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றதால் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. #JapanRail
டோக்கியோ:

ஜப்பான் நாட்டில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக அனைத்து போக்குவரத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டுச் செல்லும். இதேபோல், குறிப்பிட்ட இடத்தையும் சரியான நேரத்தில் சென்றடைவது வழக்கம். 

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன் 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் காலை 7.12 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்லும்.



இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7.12 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், சுமார் 25 வினாடிகள் முன்னதாக 7 மணி 11 நிமிடம் 35 வினாடிக்கு புறப்பட்டு கிளம்பி சென்றது. 

இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரெயில் இல்லாததை கண்டு கோபம் அடைந்தனர். பள்ளிகள், அலுவலகங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு சிலர் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு ரெயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரியுள்ளது. #JapanRail
Tags:    

Similar News