செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி வடகொரியாவுக்கு திடீர் பயணம் - முக்கிய ஆலோசனை

Published On 2018-05-09 11:26 GMT   |   Update On 2018-05-09 11:26 GMT
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் வந்துள்ளார். #MikePompeo #Pyongyang
பியாங்யாங்:

பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்த நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வட கொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் வந்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது இறுதியாக உறுதிப்படுத்தப்படும் என தெரிகிறது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MikePompeoinPyongyang #MikePompeo #Pyongyang #NorthKorea
Tags:    

Similar News