செய்திகள்

சிரிய அரசு படைகளுக்கு ரசாயன ஆயுத உதவியா? ஐ.நா புகாருக்கு வடகொரியா மறுப்பு

Published On 2018-03-02 09:51 GMT   |   Update On 2018-03-02 09:51 GMT
சிரியாவில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ரசாயன ஆயுத உதவிகள் வழங்குவதாக வடகொரியா மீது ஐ.நா புகார் கூறியிருந்த நிலையில், அதனை வடகொரியா கண்டித்துள்ளதோடு மறுப்பும் தெரிவித்துள்ளது. #Syria #NorthKorea
பியாங்யங்:

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப்போரில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த இரண்டு வாரமாக கிளர்ச்சியாளர்களை குறிவைத்து கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்யா - சிரிய அதிபர் ஆதரவு படையினர் நடத்தும் தாக்குதலில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 4 லட்சம் மக்கள் கிழக்கு கூட்டா பகுதியில் இன்னும் வெளியேற முடியாத நிலை உள்ள நிலையில், 30 நாள் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா ஒப்புதல் அளித்தது. ஆனால், அதனை அமல்படுத்தாத ரஷ்யா - சிரிய அதிபர் ஆதரவு படை தினமும் 5 மணிநேரம் தாக்குதல் இருக்காது என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, சிரிய அதிபர் ஆதரவு படையினருக்கு வடகொரியா ரசாயன ஆயுதங்கள் கொடுப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியது. இதனை அடுத்து, அமெரிக்காவும் ஐ.நா.வின் குற்றச்சாட்டை ஆமோதித்தது. இந்நிலையில், ஐ.நா.வின் குற்றச்சாட்டன் வடகொரியா மறுத்துள்ளது.



இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வடகொரிய வெளியுறவு செய்தி தொடர்பாளர், “அமெரிக்கா எல்லா போர் நெறிமுறைகளையும் மீறி எத்தனையோ முறை நடந்து கொண்டுள்ளது. அது, தன்மீதான தவறுகளை மறைக்க அடுத்தவர்கள் மீது பிரச்சனையை திருப்பி விடுகிறது. சிரியா மற்றும் ரஷ்யா உடன் எவ்வித ஆயுத ஒப்பந்தங்களும் வடகொரியா செய்து கொள்ள வில்லை” என கூறியுள்ளார்.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தி ஹேக் நகரில் உள்ள ரசாயன ஆயுதங்கள் தடுப்பு முகமை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. #Syria #NorthKorea #NorthKorea
Tags:    

Similar News