செய்திகள்

மாலத்தீவில் நீடிக்கும் அரசியல் குழப்பம் - தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிபர் திட்டம்

Published On 2018-02-04 15:00 IST   |   Update On 2018-02-04 15:00:00 IST
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த யாமீன் அப்துல் கயூம் திட்டமிட்டுள்ளார்.
மாலே:

இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவுகள் நாட்டின் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அதிபா் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நசீது, முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிரிட்டனில் சிகிச்சை பெற முகம்மது நசீது நாட்டை விட்டு வெளியேறினார். பல எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், வரும் அதிபர் தேர்தலில் போட்டியின்றி தேர்வாகலாம் என அதிபர் யாமீன் அப்துல் கயூம் கணக்கு போட்டிருந்தார்.

அவரது கனவை சுக்கு நூறாக உடைக்கும் விதமாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும், எந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அது தொடர்பான வழக்கில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் தகுதி நீக்கம் செய்த அதிபரின் உத்தரவையும் நீதிபதிகள் ரத்து செய்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நசீத்தின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போது கலவரம் வெடித்தது.

இதற்கிடையே, 85 பேர் கொண்ட அந்நாட்டு பாராளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் இடம்பெற்றால், ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சி அதிக இடங்களை பெற்று விடும். இதனால், யாமீனின் பதவிக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என யாமீன் கூறினார்.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தம் திட்டம் வைத்துள்ளதாக, யாமீன் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார். நாளை பாராளுமன்றம் கூட வேண்டிய நிலையில், 12 எம்.பி.க்கள் அவைக்குள் வந்தால் தனது பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் பாராளுமன்ற கூட்டத்தினை அதிபர் ஒத்திவைத்துள்ளார்.

கோர்ட் உத்தரவை ஏற்காத அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் நெருக்கடி முற்றிய நிலையில், ராணுவ ஆட்சி கூட அங்கு கொண்டு வரப்படலாம் என்ற சூழல் நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்ரீலங்காவில் இருக்கும் முன்னாள் அதிபர் முகம்மது நசீத், அதிபர் தேர்தலில் யாமீனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

Similar News