செய்திகள்

ஜான் கென்னடி கொலை தொடர்பான அனைத்து ரகசிய கோப்புகளையும் வெளியிடுவேன் - டிரம்ப்

Published On 2017-10-28 23:53 GMT   |   Update On 2017-10-28 23:53 GMT
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப்.கென்னடி கொலை தொடர்பான அனைத்து ரகசிய கோப்புகளை வெளியிடுவேன் என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எஃப்.கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.



ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை, வெளியிடத் தகுந்த கோப்புகளாக மாற்றம் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2891 ரகசியக் கோப்புகளை விடுவிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அந்த கோப்புகளை தேசிய ஆவணக் காப்பகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.



இந்நிலையில், கென்னடி கொலை தொடர்பான அனைத்து ரகசிய கோப்புகளையும் வெளியிட இருப்பதாக டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், “ஜெனரல் கெல்லி, சி.ஐ.ஏ., மற்றும் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை செய்த பின்னர், இப்போது உயிரோடு இருப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய கோப்புகளை தவிர மற்ற அனைத்து கோப்புகளும் விரைவில் வெளியிடப்படும்”, என பதிவிட்டுள்ளார்.

ஜான் கென்னடி கொலை தொடர்பான கோப்புகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என 1992-ல் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி 90 சதவீத ஆவணங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சமீபத்திலும் குறிப்பிட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News