செய்திகள்

நேபாளத்தில் விபத்துக்குள்ளான துருக்கி விமானம் அருங்காட்சியகம் ஆனது

Published On 2017-10-24 12:17 IST   |   Update On 2017-10-24 12:17:00 IST
நேபாளத்தில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தை பைலட் ஒருவர் அருங்காட்சியகமாக மாற்றி பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளார்.
காத்மண்டு:

கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஏர்பஸ் ஏ 330’ ரக விமானம் நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் தரை இறங்கியபோது ஓடுதளத்தைவிட்டு விலகி தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

அதில் 224 பேர் பயணம் செய்தனர். அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை அங்கிருந்து அகற்ற 4 நாட்கள் ஆனது.

தற்போது அந்த விமானம் காத்மண்டுவில் அருங்காட்சியகம் (மியூசியம்) ஆக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான முயற்சியை விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி பெட் அப்ரெடி மேற்கொண்டார்.


63 மீட்டர் நீள விமானத்தை 10 துண்டுகளாக உடைத்து லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டது. அதற்கான பணியில் துருக்கி இன்ஜினீயர் குழு ஈடுபட்டது. பின்னர் உடைக்கப்பட்ட துண்டுகளை மீண்டும் ஒட்ட வைத்து ஒன்றிணைக்கப்பட்டது. அதற்காக 2 மாதம் இரவு பகலாக பணி நடைபெற்றது. அதன்பின்னர் அழகிய அருங்காட்சியகம் ஆனது. தற்போது இதுவே நேபாளத்தின் முதல் விமான அருங்காட்சியகம் ஆகும்.

இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததும், விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்க உள்ளார் பைலட் அப்ரெடி. பொதுமக்கள் டிக்கெட் வாங்கி இந்த விமான அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.

Similar News