செய்திகள்

லண்டன் மருத்துவமனையில் இருந்து நவாஸ் ஷெரீப் மனைவி டிஸ்சார்ஜ்

Published On 2017-09-23 12:53 GMT   |   Update On 2017-09-23 12:53 GMT
புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சூம் நவாஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் நவாஸ் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் அவர் இங்கிலாந்து சென்றார். 

அங்கு அவருக்கு தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே அவருக்கு இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அவருக்கு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சைக்கு பின்னர் ஒருநாள் சிறப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர், அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். மூன்றாவது அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகளான மரியம் நவாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், உடல்நலம் நன்றாக தேறியுள்ளதால் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் நவாஸ் ஆகியோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து மரியம் நவாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், "இப்போது தான் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தோம். மூன்றாவது அறுவைசிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை நன்றாக தேறியுள்ளது. அவருக்காக இறைவனிடம் வேண்டிய அனைவருக்கும் நன்றி", என கூறியுள்ளார்.


Tags:    

Similar News