செய்திகள்

டெல்லியில் எங்கள் தூதரகம் தாக்கப்பட்ட வழக்கின் நிலை என்ன?: மோடியிடம் கேட்ட இஸ்ரேல் பிரதமர்

Published On 2017-07-06 07:51 IST   |   Update On 2017-07-06 07:51:00 IST
2012-ம் ஆண்டு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியிடம், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல் அவிவ்:

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் வாயிலில் கார் குண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், தூதரக ஊழியர் உள்ளிட்ட 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த வழக்கை தேசிய புலணாய்வு அமைப்பு விசாரித்து வந்தது. அந்த நேரத்தில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிய நிலையில், இந்த தாக்குதலை ஈரானைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.



இந்நிலையில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். நேற்று, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

தீவிரவாதம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். அப்போது, டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் தாக்குதலுக்கு உள்ளன வழக்கின் தற்போதைய நிலை என்ன? என பெஞ்சமின் நேதன்யாகு, மோடியிடம் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 3-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன், “ தூதரக தாக்குதல் வழக்கு விசாரணையை இந்தியா மூடி மறைப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. எனினும், தொடர்ந்து இஸ்ரேல் இந்த
விவாகரத்தை எழுப்பும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News