செய்திகள்

அமெரிக்கா: மருத்துவமனையில் துப்பாக்கி தூக்கிய டாக்டர் - ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை

Published On 2017-07-01 01:55 GMT   |   Update On 2017-07-01 01:55 GMT
அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து ஒரு நோயாளியை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ப்ரோன்ஸ் லெபனான் மருத்துவமனைக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த டாக்டர் ஒருவர் அங்கிருந்தவர்களை மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதனால், பதற்றமடைந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிதறி ஓடி அங்கிருந்த அறைகளில் மறைந்து கொண்டனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த நகர போலீசார் மருத்துவமனையை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து சப்தம் எதும் கேட்காததால் சந்தேகமடைந்த போலீசார், உள்ளே அதிரடியாக புகுந்தனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் ஹென்ரி பெல்லோ, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு அங்கு பிணமாக கிடந்துள்ளார்.



மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மீட்டு வரும் போலீசார்

டாக்டர் ஹென்ரி பெல்லோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். டாக்டர் ஹென்ரி திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என நியூயார்க் நகர போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News