செய்திகள்

லண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: மசூதி அருகே வேன் மோதி ஒருவர் பலி

Published On 2017-06-19 11:31 IST   |   Update On 2017-06-19 11:31:00 IST
லண்டன் நகரில் மசூதிகளில் தொழுகை முடிந்து திரும்பி வந்தவர்கள் மீது வேனை ஏற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டன்:

வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோடு உள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால் இங்குள்ள மசூதிகளில் நேற்று நள்ளிரவு வேளையில் ’தராவீஹ்’ தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் தொழுகை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் நடந்து சென்ற பாதைக்குள் புகுந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த திடீர் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவரை மடக்கி கைது செய்தனர்.

இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்து அல்ல. சமீபத்தில் லண்டனில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களின் தொடர் வரிசை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் தெரசா மே கூறுகையில், தீவிரவாதிகள் போன்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

Similar News