செய்திகள்

கடந்த இரண்டாண்டுகளாக இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது குறைந்துவிட்டது: ஸ்விஸ் வங்கிகள்

Published On 2017-06-19 00:46 GMT   |   Update On 2017-06-19 00:46 GMT
கடந்த இரு ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.
ஜுரிஜ்:

கடந்த இரு ஆண்டுகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக ஸ்விச்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணத்தை பதுக்குபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பல்வேறு கட்ட வலியுறுத்தல்களுக்குப் பிறகு, சந்தேகத்துக்கிடமானவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க ஸ்விட்சர்லாந்து அரசு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டது.

இதன்படி, 2019-ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கு தகவல்கள் கிடைக்கும். எனினும், இந்தத் தகவல்களை இந்திய அரசு ரகசியமாகப் பாதுகாக்க வேண்டுமென்று ஸ்விஸ் வங்கிகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது குறைந்து விட்டதாக தனியார் வங்கிகளின் சங்க மேலாளர் ஜன் லான்லோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-



கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் ஸ்விஸ் தனியார் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் ரூ.8,392 கோடியாகக் குறைந்துவிட்டது. 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு எங்கள் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல்முறையாகும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் டெபாசிட் எங்கள் வங்கிகளில் ரூ.23,000 கோடியாக இருந்தது. இதுவே இந்தியர்கள் செய்த அதிகபட்ச டெபாசிட் ஆகும். அதன்பிறகு பணம் டெபாசிட் செய்யப்படுவது குறையத் தொடங்கிவிட்டது.

ஆசிய பிராந்தியத்தைப் பொறுத்த அளவில் ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் இப்போது எங்கள் வங்கிகளில் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.

இவ்வாறு லான்லோ தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால், அங்கிருந்து விவரங்களைப் பெற்று தங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட கருப்புப் பண முதலைகள், தங்கள் பணத்தை ஸ்விஸ் வங்களில் இருந்து வேறு இடத்தில் பதுக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Tags:    

Similar News