செய்திகள்

பைசாகி திருவிழா: சிறப்பு ரெயில்கள் மூலம் 1400 இந்திய சீக்கியர்கள் பாகிஸ்தான் வருகை

Published On 2017-04-12 21:50 IST   |   Update On 2017-04-12 21:50:00 IST
பாகிஸ்தானில் நடைபெற உள்ள பைசாகி திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து 1400 சீக்கியர்கள் இன்று வந்து சேர்ந்தனர்.
லாகூர்:

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் யாத்திரையாக வருவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள ஹசன் அப்தல் குருத்வாரா கோவிலில் 14-ம்தேதி பைசாகி திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து இன்று 1430 சீக்கிய யாத்ரீகர்கள் 3 சிறப்பு ரெயில்கள் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களுக்கு வாகா ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் லாகூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

2000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் மூன்றாவது ரெயிலில் வெறும் 6 பேர் மட்டுமே வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் வந்துள்ள சீக்கியர்கள் நன்காசாகிப், பரூக்காபாத் சச்சா சோடா, கர்தார்பூர் நரோவல், லாகூர் தேரா சாகிப் ஆகிய குருத்வாரா கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அதன்பின்னர் ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா திரும்புகின்றனர். அவர்களுக்கு வசதிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Similar News