செய்திகள்

மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் பலி

Published On 2017-04-11 23:41 GMT   |   Update On 2017-04-11 23:41 GMT
மெக்சிகோவில் கட்டடம் கட்டும் வேலையின் போது கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மெக்சிகோ:

மெக்சிகோ நகரில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஒன்றை கட்டும் வேலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் கான்கிரீட் உத்திரத்தை கட்டுமானத்தின் மீது வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கான்கிரீட் பலகைகள் திபுதிபுவென சரிந்து விழுந்தன. அதனுள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறித்துடித்தனர்.

உடனடியாக தீயணைக்கும் படையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் கான்கிரீட் பலகைகள் அமுக்கியதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததால், அவர்களை பிணங்களாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Similar News