செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு டுவிட்டர் அதிருப்தி

Published On 2017-01-29 16:19 GMT   |   Update On 2017-01-29 16:19 GMT
அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்;

அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார்.

உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்த அதிபர் டிரம்ப்,  ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவுகள் அமெரிக்க மக்கள், உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர், 'பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களால் கட்டமைக்கப்பட்டதுதான் ட்விட்டர். இதனால் அவர்களுடன் எப்போதும் துணை நிற்போம்' என தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் டிரம்பின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News