செய்திகள்

பாகிஸ்தானில் மாயமான மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பினார்

Published On 2017-01-28 16:09 GMT   |   Update On 2017-01-28 16:09 GMT
பாகிஸ்தானில் காணாமல்போன மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பியதையடுத்து அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள பாத்திமா ஜின்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சல்மான் ஹைதர். முன்னணி மனித உரிமை ஆர்வலரான இவர் பாகிஸ்தான் அடிப்படைவாதிகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 6-ம் தேதி இஸ்லாமாபாத்தில் காணாமல் போனார்.

கடைசியாக பானி காலா பகுதியில் தன் நண்பர்களுடன் இருந்தபோது, மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வருவதாக கூறியவர், வீடு திரும்பவில்லை. இரவு 10 மணி ஆகியும் வீட்டிற்கு வராதால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போனை எடுக்கவில்லை.

பின்னர் சல்மான் போனில் இருந்து மனைவிக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், தனது கார் கோரல் சவுக் பகுதியில்  நிற்பதாகவும், அதை எடுத்துக்கொண்டு போகும்படியும் கூறப்பட்டிருந்தது. போலீசார் அங்கு சென்று காரை கண்டுபிடித்தனர். ஆனால் சல்மானைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

அவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், நேற்று சல்மான் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இத்தகவலை காவல்துறை இன்று தெரிவித்தது.

Similar News