செய்திகள்

சார்க் மாநாட்டை நடத்திக் காட்டுவோம் - பாகிஸ்தான் நம்பிக்கை

Published On 2017-01-28 09:47 GMT   |   Update On 2017-01-28 09:47 GMT
கடந்த ஆண்டு ரத்தான சார்க் மாநாட்டை விரைவில் நடத்திக் காட்டுவோம் என பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாதான் மாநாடு நடத்துவதை தாமதப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமாபாத்:

கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் தாக்குதலால் கடும் கோபமடைந்த இந்திய அரசு, சர்வதேச நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடக்க இருந்த 19-வது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என இந்தியா அறிவித்தது. இந்தியாவைத் தொடர்ந்து வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணித்ததால் மாநாடு நடைபெறவில்லை.

இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியடைந்தது. தற்போது, இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் பதற்றம் குறைந்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவு ஆலோசகர் சர்தார் அஜீஸை சார்க் நாடுகளின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பகதூர் தாபா நேற்று இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பின் போது பேசிய சர்தார் அஜீஸ், “கடந்த ஆண்டு ரத்தான 19-வது சார்க் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டை பாகிஸ்தான் நடத்துவதற்கு தயாராகவே இருக்கிறது. விரைவில் சார்க் மாநாடு நடக்கும் என நம்புகிறேன். ஆனால், இந்திய அரசுதான் மாநாடு நடத்துவதை தாமதப்படுத்துகிறது” என குற்றம் சாட்டினார்.

Similar News