செய்திகள்

டொனால்ட் டிரம்ப் பிறந்து, வளர்ந்த வீடு ஏலத்துக்கு வந்தது

Published On 2017-01-18 04:39 GMT   |   Update On 2017-01-18 04:39 GMT
அமெரிக்காவின் வருங்கால அதிபரும் பிரபல தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நகரில் பிறந்து, வளர்ந்த பூர்வீக வீடு ஏலத்துக்கு வந்தது.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பர்ரோ ஆல் குயின்ஸ் பகுதியில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான ஃபிரெட் டிரம்ப் என்பவர் கடந்த 1940-ம் ஆண்டில் ஐந்து படுக்கறைகளுடன் கூடிய பெரிய வீடு ஒன்றை கட்டி இருந்தார்.

அவரது மகனான அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த வீட்டில் பிறந்து, நான்கு வயதுவரை இங்குதான் வளர்ந்தார்.

ஃபிரெட் டிரம்ப்பின் மறைவுக்கு பின்னர் இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதற்கிடையில், ரியல் எஸ்டேட் தொழிலில் பிசியாகிவிட்ட டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரின் ஐந்தாவது நிழற்சாலையில் உள்ள டிரம்ப் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பர்ரோ ஆல் குயின்ஸ் பகுதியில் டொனால்ட் டிரம்ப் பிறந்து, வளர்ந்த பூர்வீக வீடு தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த வீட்டை விலைக்கு வாங்கிய ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த வீட்டை தற்போது ஆன்லைன் வழியாக ஏலத்தில் விட தீர்மானித்துள்ளது.

இந்த வீட்டை ஏலம் கேட்பவர்கள் முன்வைப்பு தொகையாக ஏலத்தொகையில் 10 சதவீதத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தற்போது நடைபெற்றுவரும் ஏலம் பல நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக, பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் கூட தனது நெருங்கிய நண்பர்களின் பெயரால் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

Similar News