செய்திகள்
கோப்புப் படம்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படை பறிமுதல் செய்தது

Published On 2016-12-17 06:00 GMT   |   Update On 2016-12-17 06:00 GMT
தென்சீனக் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தது அத்துமீறலாகும் என அமெரிக்க ராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
பீஜிங்:

தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USNS Bowditch’ என்ற போர்க்கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆளில்லா தேடும் விமானம் மூலமாக சில ஆய்வுகளை செய்தபோது அந்த ஆளில்லா விமானத்தை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தும், அதை சீன கடற்படையினர் பறிமுதல் செய்ததற்கு  அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்ட்டகான்’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த ஆளில்லா விமானத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளது.

தைவான் விவகாரத்தில் ‘ஒன்றுபட்ட சீனா’ என்ற கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அமெரிக்காவின் புதிய அதிபராக விரைவில் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், சீன கடற்படையினரின் இந்த அதிரடி நடவடிக்கை இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Similar News