செய்திகள்

சோமாலியா தலைநகரில் கார் குண்டு வெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு

Published On 2016-11-26 13:12 GMT   |   Update On 2016-11-26 13:12 GMT
சோமாலியா நாட்டின் தலைநகரில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொகடிஷூ:

சோமாலியா நாட்டில் கடந்த சில வாரங்களாக பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நவம்பர் 30-ம் தேதியுடன் தேர்தல் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்தை அகற்ற விரும்பும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இந்த தேர்தல் நடைமுறைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். தலைநகர் மொகடிஷூவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதிபர் பதவி மற்றும் எம்.பி. பதவிகளுக்கு போட்டியிடும் பலர் வெளிநாடுகளின் கைக்கூலிகளாக இருப்பதாகவும் அல் ஷபாப் குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷூவின் வபேரி மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் துடித்தனர். சிலர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தலைநகரில் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் அல் ஷபாப் அமைப்பு, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

Similar News