செய்திகள்

வங்காளதேச முன்னாள் பிரதமருக்கு பிடிவாரண்டு

Published On 2016-11-18 02:39 IST   |   Update On 2016-11-18 02:39:00 IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா முந்தைய விசாரணைகளின் போது கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
டாக்கா:

வங்காளதேசத்தில், தேசத்தந்தை என போற்றப்படும் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட ஆகஸ்டு 15-ந் தேதி தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சியான தேசிய கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (வயது 71) தனது பிறந்தநாளை கொண்டாடுவது அங்கு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் கலிதா ஜியா ஆகஸ்டு 15-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கலிதா ஜியா மீது வழக்கு தொடுத்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை டாக்கா உள்ளூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலிதா ஜியா முந்தைய விசாரணைகளின் போது கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்திய முழுமையான அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Similar News