செய்திகள்

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றார் இம்ரான் கான்

Published On 2016-11-01 19:42 IST   |   Update On 2016-11-01 19:42:00 IST
பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் வாபஸ் பெற்றுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் வெளியாயின. மிகப்பெரிய ஆவணக் கசிவாக கருதப்படும் இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இது பாகிஸ்தான் அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வலியுறுத்தி நாளை இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

இதற்காக வெளியூர்களில் இருந்து கட்சி தொண்டர்கள் இஸ்லாமாபாத் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை போலீசார் நகருக்கு வெளியில் தடுத்து நிறுத்தி கலைத்து வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது உறவினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அரசுக்கு எதிராக நாளை நடத்தவிருந்த போராட்டத்தை இம்ரான்கான் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மாறாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை கொண்டாட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News