செய்திகள்

வங்காளதேசம்: சந்தியா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி?

Published On 2016-09-21 10:37 GMT   |   Update On 2016-09-21 10:37 GMT
வங்காளதேசத்தில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச்சென்ற படகு இன்று சந்தியா ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சுமார் 30 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
டாக்கா:

வங்காளதேசத்தில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் பணத்துக்கு ஆசைப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை படகோட்டிகள் ஏற்றிச் செல்கின்றனர். பொதுமக்களும் இதில் உள்ள ஆபத்தைப்பற்றி கவலைப்படாமல், எப்படியாவது அக்கரைக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற அவசரத்தில் இதுபோன்ற படகுகளில் ஏறி, உயிருக்கு உலை வைத்துக் கொள்கின்றனர்.


விளக்கப் படம்:

அவ்வகையில், வங்காளதேசத்தில் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த சுமார் 80 பேர் இன்று ஒரு படகில் ஏறி சந்தியா ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆட்களை ஏற்றிவந்த அந்தப் படகு, ஆற்றின் நடுவே நிலைதடுமாறி நீருக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய சிலர் சிரமப்பட்டு, நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில், முப்பதுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் முழுமூச்சில் நடைபெற்றுவரும் நிலையில் படகு மூழ்கி பலமணி நேரம் ஆனதால் தண்ணீருக்குள் மூழ்கிய பலர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

வங்காளதேசத்தில் இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் படகுகள் கவிழும் விபத்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் மத்தியப் பகுதியில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஒருபடகு ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 69 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

Similar News