செய்திகள்

நியூயார்க் அருகே குண்டுவெடிப்பு

Published On 2016-09-18 03:37 GMT   |   Update On 2016-09-18 03:37 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மன்ஹாட்டன் அருகேயுள்ள செல்சியா குடியிருப்பு பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பை அடுத்து அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதாக அங்கு குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், செல்சியா குடியிருப்பு பகுதியின் 23-வது தெருவில் உள்ள 6-வது மற்றும் 7-வது நிழற்சாலைக்கு விரைந்துசென்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் அந்த வட்டாரத்தை சூழ்ந்துள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வழியாக செல்வதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என நியூயார்க் நகர போலீசார் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க ஊடகங்களில் வெளியாகிவரும் முதல்கட்ட தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் மற்றும் நோக்கம் தொடர்பான அறிவிப்பு ஏதுமில்லை. இச்சம்பவத்தில் சுமார் 25 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குப்பை தொட்டியில் கிடந்த மர்மப்பொருள் திடீரென வெடித்ததால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில் விரிவான இதர தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News