செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் ரகசிய அணு ஆயுதம் தயாரிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை

Published On 2016-09-17 04:32 GMT   |   Update On 2016-09-17 04:32 GMT
பாகிஸ்தான் மீண்டும் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் மீண்டும் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் உள்ள அணு ஆயுத நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை பாகிஸ்தான் எட்டி வருகிறது. கடந்த 1998-ம் ஆண்டு முதன் முறையாக அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.

இதன் மூலம் 120 அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அணு ஆயுத நாடு என தன்னை பிரகடனப்படுத்தியது. அதை தொடர்ந்து இந்தியா, இஸ்ரேல், மற்றும் வட கொரியாவை விட கூடுதலாக அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ரகசியமாக அணு ஆயுத தொழிற்சாலை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கிழக்கே 30 கி.மீ. தூரத்தில் ககுடா நகரில் இது கட்டப்பட்டுள்ளது.

இங்கு யுரேனியம் செரிவூட்டல் படுவதை ஐ.எச்.எஸ். ஜேன்ஸ் உளவு நிறுவனத்தின் உளவு செயற்கை கோள் போட்டோக்கள் உறுதி செய்கின்றன என மேற்கத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2015 செப்டம்பர் 28 மற்றும் 2016 ஏப்ரல் 18-ந்தேதியும் இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இங்கு தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கப்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் 3-வது இடம் பிடிக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது சீனா, பிரான்ஸ், ரஷியா இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் மட்டுமே சட்டப்பூர்வமாக அணு ஆயுத நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 9 நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்கு மொத்தம் 16,300 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் 7500 ரஷியாவிலும், 7200 அமெரிக்காவிலும், பிரான்சில் 300, சீனாவில் 250, இங்கிலாந்தில் 215, பாகிஸ்தானில் 100 முதல் 120 வரை, இந்தியாவில் 90 முதல் 110 வரை, இஸ்ரேலில் 80, வட கொரியாவில் 10-க்கும் குறைவான அணு ஆயுதங்கள் உள்ளன.

Similar News