செய்திகள்

ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: இராணுவ வீரர்கள் 8 பேர் பலி

Published On 2016-04-25 07:53 IST   |   Update On 2016-04-25 07:53:00 IST
ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில், இராணுவ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சனா:

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில், இராணுவ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை வெளியேற்றும் பொறுட்டு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இருதரப்பினரிடையே அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

இதனையடுத்து, அல்கொய்தா தீவிரவாதிகளை அகற்றுவதற்காக சவுதி தலைமையிலான கூட்டணியால் பயிற்சி அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏமன் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் அப்யான் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  

ஏமன் நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் சவுதி அரேபியா கூட்டுப் படை வீரர்கள் இணைந்து அல்-கொய்தா வீரர்கள் இருப்பிடங்களை நோக்கி முன்னேறி வந்தனர்.

இந்நிலையில், ஏமன் நாட்டின் அப்யான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் புதிதாக பயிற்சி பெற்ற 8 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆனால், அப்யானில் ஏமன் இராணுவத்தினர் முன்னேற்றம் அடையாமல் தடுப்பதற்காக கன்னிவெடி கார்கள், சாலையோர வெடிகுண்டுகள் என பல்வேறு புதுயுக்திகளை அல் கொய்தா தீவிரவாதிகள் கையாண்டுள்ளனர்.

Similar News