செய்திகள்

இலங்கையில் அரசியல் அமைப்பு சீர்திருத்த குழு அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம்

Published On 2016-04-25 07:19 IST   |   Update On 2016-04-25 07:19:00 IST
இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும், இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை குறித்த அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு :

இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும், இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு மூத்த வக்கீல் லால் விஜநாயகேவை அமைப்பாளராக கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. அனேகமாக மே மாதம் 15-ந் தேதி வாக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி லால் விஜநாயகே கூறியதாவது:-

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து கருத்து கேட்பது இன்னும் முடிவடையவில்லை. இதுவரை மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த யோசனைகளில் எதைச் சேர்க்கலாம் என்று ஆய்வு செய்து வருகிறோம். புதிய அரசியல் அமைப்பில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு கூட்டாட்சி முறையில் தீர்வு காண வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. சில கட்சிகள் இன்னும் தங்களுடைய கருத்தை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் ஒப்புக் கொண்டதுபோல் இந்த மாத இறுதியில் அறிக்கையை தாக்கல் செய்ய இயலாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News