செய்திகள்

கத்தி குத்தில் ஈடுபட்ட 12 வயது பாலஸ்தீன சிறுமி இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை

Published On 2016-04-25 01:08 IST   |   Update On 2016-04-25 01:08:00 IST
கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை இஸ்ரேலிய அரசு சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது.
ஹீப்ரோன்:

இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளிடையே தீராத பகைமை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில், பாலஸ்தீன இளைஞர்கள் வினோதமான தாக்குதல் யுக்தியை கையாளுகின்றனர். அவர்கள் இஸ்ரேல் மக்கள் மீது கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுகின்றது. கத்தி குத்தில் ஈடுபட முயன்ற பாலஸ்தீன இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர் கதையாகிவிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த கலவரங்களில், பாலஸ்தீனர்களின் கத்தி குத்தில் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், 201 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பாலஸ்தீனியத்தை சேர்ந்த திமா அல்-வாவி என்ற 12 வயது சிறுமி, பள்ளிச் சீருடையில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெஸ்ட் பேங்க் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் இருந்து கத்தியை இஸ்ரேல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த 12 வயது சிறுமி வாவியை இஸ்ரேலிய அரசு சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது.
 
இதனையடுத்து, வாவி துல்கரெம் பகுக்தியில் பாலஸ்தீன அதிகாரிகளிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டாள். பாலஸ்தீனம் பகுதியில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட சிறுமிகளில் மிகவும் வயது குறைந்தவர் வாவி தான் என்று அவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தாரிக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் அரசு தனது சிறைகளில் 450 இளம் குற்றவாளிகளை அடைத்து வைத்துள்ளது. அதில் நூறு பேர் 16 வயதிற்கு உட்பட்டவர்கள்.

Similar News